ஜூன் 2 ஆம் திகதி கண்டிப்பாக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டிய கட்டாயம் இருந்தும் குறித்த திகதிக்கு அப்பால் வேறொரு திகதியை தேர்தல் திகதியாக அறிவித்திருப்பதன் மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் அமைப்பினை மீறியுள்ளது எனக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டாது சர்வாதிகார ரீதியில் ஆட்சியை முன்னெடுத்து செல்ல நினைக்கும் ஜனாதிபதிக்கு உறுதுணையாக தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
புதிய தேர்தல் திகதி ஒன்றினை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பங்காளிக் கட்சியினர் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம்.
ஜனாதிபதியும், பிரதமரும் ஒரு விதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுத்து தமது தேவையை நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சி எடுத்துள்ளனர்.
இப்போதும் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படும் நிலைமையே உருவாக்கியுள்ளது. மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டும், வேட்புமனு தாக்கலுக்கான அறிவிப்பையும் விடுத்ததுள்ள நிலையில்,
ஜூன் மாத 2 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும், அவ்வாறு கூட்டப்படாது போனால் சட்டப்பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றதாக மாறும்.
ஆகவே இப்போது ஜூன் 2 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ள நிலையில் ஆணைக்குழுவே அரசியல் அமைப்பை மீறியுள்ளது.
ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை நாம் கடுமையாக எதிர்த்துள்ளோம். ஆணைக்குழு செய்தது தவறு என்பதை ஆணைக்குழுவின் தலைவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் அரசியல் கட்சிகளை வரவழைத்து நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து தேவைப்பட்டால் தேர்தலை மேலும் பிற்போட தீர்மானம் எடுப்பதாக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டாது ஜனாதிபதிக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் ஆணைக்குழுவின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதேபோல் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழல் ஒன்று இல்லாததையும், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணங்களை வழங்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்கட்டினோம். இந்த காரணி குறித்து இப்போது வரையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் காக்கின்றது.
ஜனாதிபதியின் பிறந்தநாள் பரிசை வழங்குவது போன்று ஜூன் 20 ஆம் திகதியை தேர்தல் திகதியாக அறிவித்துள்ளனர்.
எனினும் ஜூன் 2 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் பிற்போடப்பட்டால் பழைய பாராளுமன்றம் மீண்டும் கூட்டலாம். அதேபோல் பாராளுமன்றத்தை கூட்டாது அரசியல் அமைப்பிற்கு முரணாக சர்வாதிகார முறையில் ஆட்சியொன்றை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதி நினைக்கின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என்றார்.
இது குறித்து சுஜீவ சேனசிங்க கூறுகையில்,
உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காத காரணத்தினால் இன்று நாட்டில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
எனினும் எமது வைத்திய அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்துள்ளனர் இதனை நாம் பாராட்டுகின்றோம்.
எவ்வாறு இருப்பினும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களை விட பசி பட்டினியினால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இராணுவத்தையும், சுகாதாரதுறையின் சேவையை காட்டி மக்களின் பட்டினியை மூடி மறைக்க ஊடகங்கள் பல முயற்சித்து வருகின்றது. அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வாய்வார்த்தையுடன் முடிந்துள்ளதே தவிர அரசாங்கத்தினால் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாக்கியுள்ளது.
வெறும் ஐயாயிரம் ரூபாவில் ஒரு குடும்பம் எவ்வளவு நாள் வாழ முடியும். கொரோனா நிவாரணத்திற்காக சர்வதேச நாடுகளில் இருந்து பல கோடி ரூபாய்கள் நிவாரணம் கிடைத்தது.
அதற்கு என்னவானது. சுனாமி நிவாரணம், ஏனைய அனர்த்தங்களுக்கு கிடைத்த பணம் என்னவானதோ அதே நிலைமை இப்போது கொரோனா நிவாரண நிதிக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எமக்கு உள்ளது.
இந்த ஆட்சியாளர்கள் மனநிலை என்ன, கடந்த காலங்களில் என்ன செய்தனர் என்பது எமக்கு நன்றாக தெரியும். ஆகவே இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. நிவாரணங்களை வழங்குவதில் அரசியல் செய்யக்கூடாது.
ஒட்டுமொத மக்களுக்கும் எதிரான நெருக்கடியொன்றிற்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் இதில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. நாட்டின் நிலைமையில் அரசியல் செய்யப்போனால் நாடாக பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இப்போது தேர்தல் ஒன்றினை நடத்த எந்த தேவையும் இல்லை. நாட்டுக்காக நாம் அனைவரும் செயற்பட தயாராக உள்ளோம். பாராளுமன்றத்தில் எந்தவித கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாது செயற்பட நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.