அமெரிக்காவில் கொரோனா தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகும் 3 வாரம் முன்னரே பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் பலியான தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த 57 வயதான பாட்ரிசியா தவுத் என்பவரே கொரோனா அறிகுறிகளுடன் மரணமடைந்த முதல் அமெரிக்கர் என தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் திகதி பாட்ரிசியா தமது இல்லத்தில் வைத்தே மரணமடைந்துள்ளார். கொரோனா அறிகுறிகளுடன் இவர் இறந்தாலும், உரிய பரிசோதனைகளுக்கு இவர் உட்படாததால் கொரோனாவில் இவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை.
சில நாட்களாக பாட்ரிசியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆனால் திடீரென்று குணமடைந்துள்ளார். ஆனால் எந்த காரணமும் இன்றி மரணமும் அடைந்துள்ளார் பட்ரிசியா.
சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை கொண்ட ஒரு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் பட்ரிசியா.
பட்ரிசியா மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என அவரது உறவினர்கள் நம்பினாலும், அதில் சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.
காரணம், பட்ரிசியா புகைப்பது இல்லை, உணவு கட்டுப்பாடு கொண்டவர் மட்டுமின்றி தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்பவர்.
புதனன்று சாண்டா கிளாரா நகர நிர்வாகம், பட்ரிசியா கொரோனாவால் இறந்தார் என்பதை உறுதி செய்ததுடன், மாரடைப்பால் அல்ல என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆனால் கலிபோர்னியாவில் முதல் கொரோனா இறப்பு என்பது மார்ச் 4 ஆம் திகதி என்றே அரசு ஆவணங்களில் இதுவரை பதிவாகியிருந்தது.
மட்டுமின்றி கலிபோர்னியாவில் கொரோனாவுக்கு 1,067 பேர் இலக்கான நிலையில் சிகிச்சை பலனின்றி 22 பேர் மரணமடைந்த பின்னரே, மார்ச் 19 ஆம் திகதி மாகாண நிர்வாகத்தால் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.