அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் முகத்தில் புன்னகையை தவழ வைக்கும் புனிதப்பணியில் ஒரு இந்திய வம்சாவளி சிறுமி ஈடுபட்டு வருகிறார்.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கோன்ஸ்டகா உயர்நிலைப்பள்ளியின் 10-வது கிரேடு மாணவி ஹிதா குப்தா.
இவர் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனைகளில் படுத்திருக்கிற முதியோருக்கு இவர் கைப்பட வாழ்த்து அட்டைகள் தயாரித்து அனுப்புகிறார்.
அத்துடன் அவர்கள் கவலைகளை மறந்து சற்று இனிமையாக பொழுதைக்கழிக்கிற வகையில் புதிர் புத்தகங்கள், கதை புத்தகங்கள், வர்ணம் தீட்டும் புத்தகங்கள், கலர் பென்சில் பாக்கெட்டுகள், கிரேயான்ஸ் பாக்கெட்டுகள் ஆகியவற்றை அனுப்பி வருகிறார்.
தமது செயற்பாடு குறித்து பேசிய ஹிதா குப்தா, நமது முதியோர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இந்த நிச்சயமற்ற தருணத்தில், பல முதியோருக்கு பீதி இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் தனிமையில் இல்லை என்பதை நாம் உணர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அந்த பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் நான் என் சொந்தப்பணத்தைக்கொண்டுதான் அவர்களுக்கு பரிசு தொகுப்புகளை அனுப்பி வந்தேன்.
உள்ளூரில் உள்ள 16 மருத்துவமனைகளுக்கு இப்படி செய்து வருகிறேன். எனது 9 வயது தம்பி திவித் குப்தா எழுதி அனுப்புகிற உற்சாகமூட்டும் குறிப்புகளையும் பரிசுத்தொகுப்புடன் சேர்த்து அனுப்புகிறேன்.
தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறும் ஹிதா, இதன்மூலம் 7 மாகாணங்களில் 50 மருத்துவமனைகளில் உள்ள முதியோரையும், குழந்தைகளையும் நாங்கள் சென்றடைந்து இருக்கிறோம் என்கிறார்.