“பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வெலிசறை கடற்படை முகாம் ஆகியவற்றிலிருந்து அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்கள் பதற்றமடைய வேண்டாம்.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளர்களை அதிக அளவில் அடையாளம்காண முடிந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஆரம்ப கட்டத்தில் மிகவும் குறைந்தளவான பி.சி.ஆர். சோதனைகளே மேற்கொள்ளப்பட்டன. கடந்த வாரமளவில் அது 531ஆக அதிகரிக்கப்பட்டதோடு, இவ்வாரம் அதனை 730ஆக அதிகரித்தோம். நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பி.சி.ஆர் பரிசோதனை கூடங்களையும் இணைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்கின்றோம். ஒரு சில ஆய்வுக்கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை மேலும் அதிகரிப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, சுகாதார அமைச்சால் தேசிய ரீதியில் வழங்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு அவர்களின் உதவியைப் பெறுவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையில் மிக உயர்ந்த அளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நோக்கமாகும்” – என்றார்.