தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள நளினியின் கணவர் முருகன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இவர்கள் உட்பட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியும் முடிவுக்கு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வந்தன. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு `மிக அவசரம்’ என்று குறிப்பிட்டு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று முன்தினம் இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், “முருகனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
ஆனால், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார். கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க வீடியோ கால் அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.