நாட்டில் மேலும் இரு கொரோனா தொற்றுறுதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் அடையாளங் காணப்பட்ட 44 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 4478 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொவிட் 19 தொற்றில் இருந்து சுகாதார பணிக்குழாமை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதி சுகாதார சேவை பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்களாலும் இந்த விடயம் தொடர்பில் கண்காணிக்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு அமைய 180 கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது..
இந்தநிலையில் வெலிசர முகாமில் சேவையாற்றி தற்போது விடுமுறையில் சென்றுள்ள அனைத்து கடற்படை உறுப்பினர்களையும் மீண்டும் அழைப்பதற்கு கடற்படை நேற்றைய தினம் தீர்மானித்தது.
அத்துடன் இராணுவம் மற்றும் விமானப் படைகளும் விடுமுறையில் சென்றுள்ள தமது உறுப்பினர்களை மீள அழைப்பதற்கு தீர்மானித்ததுடன் முப்படை உறுப்பினர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதன் ஊடாக தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்ர பாலசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே விடுமுறையில் வீடுகளுக்கு சென்றுள்ள கடற்படை உறுப்பினர்களை சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய பரிசோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டின்ன கொமான்டர் இசுரு சூரிய பண்டாரவிடம் வினவியது போது,
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்கள், பிரதேச சுகாதார அதிகாரிகளின் அனுமதிக்கு அமைய மாத்திரமே மீண்டும் அழைத்து வரப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அதேநேரம் விடுமுறையில் சென்றுள்ள கடற்படை உறுப்பினர்களில் பெருமளவானோர் மீண்டும் தமது முகாம்களுக்கு திரும்பியவாறு உள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை மீண்டும் முகாம்களுக்கு அழைத்து வருவதற்கு இலகுவாக இன்றைய தினம் நாடாளாவிய ரீதயில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.