கொரோனாவால் 2021ஆம் ஆண்டு ஆஸ்கார் போட்டியில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள் கூட மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடைபெற உள்ள ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில், கொரோனாவால் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTT பிளாட்ஃபார்ம்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் அனுமதியை ஆஸ்கர் குழுத் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் டான் ஹட்சன் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்கர் கமிட்டியை பொறுத்தவரையில் தியேட்டர்களில் வெளியாகி ஓடாத எந்த படத்தையும் விருதுக்கு தகுதி பெறும் போட்டியில் பங்கேற்க இதுவரை அனுமதியளித்தது கிடையாது. ஆனால், தற்போதைய சூழலை கொரோனா வைரஸ் பயங்கரமாக மாற்றியிருக்கிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு மட்டும் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்மில் நேரடியாக ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கும் முடிவுக்கு ஆஸ்கர் குழு வந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆஸ்கர் ரேஸில் அதிகப்படியான படங்களை களமிறக்கிய நெட்பிளிக்ஸ் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் தங்களது படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஆஸ்கர் போட்டிக்கு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்கார் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தியேட்டர்கள் திறக்க இந்த ஆண்டு இறுதி வரை ஆகலாம் என்றும், மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு செல்லவார்களா என்ற கேள்வி நிலவுகிறது. எனவே ஆஸ்கார் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.