ஜேர்மனியில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹனாவ் நகரத்தில் பல வழிப்போக்கர்கள் மீது மர்ம நபர்கள் கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொலிசாரின் ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து முதல் ஏழு ஆண்கள் வழிப்போக்கர்களை கத்தியால் தாக்கியதாக தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 17 முதல் 26 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிலர் கத்திக்குத்து காயங்களுடன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தப்பி ஓடிவிட்ட குற்றவாளிகள் தேடிவந்த பொலிசார், சம்பவயிடத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஹனாவ் நகரைச் சேர்ந்த 23 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தாக்குதலின் பின்னணி இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஹனாவ் பொது வக்கீல் அலுவலகம் விசாரணையை தொடங்கியுள்ளது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.