குருணாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், குருணாகல் உட்பட மாவட்டத்தின் பிரதான நகரங்கள் பலவற்றில் இன்று முதல் எதிர்வரும் மே 5 ஆம் திகதிவரை அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட அவ்வந்த நகரங்களின் வர்த்தக சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
குருணாகல், அலவ்வ, கல்கமுவ, குளியாபிட்டிய, ஹிரிபிட்டிய, கும்புக்கெட்டே ஆகிய நகரங்களின் வர்த்தக நிலையங்களை இவ்வாறு மூட அவ்வந்த நகர வர்த்தக சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
குருணாகல், அலவ்வ நகரில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்யை தினம் முதல் அங்கு அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
குளியாபிட்டிய பகுதியில் ஹம்மலவ மற்றும் உடுபத்தாவ பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களான கடற்படையினர், நகர் எங்கு சஞ்சரித்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் குளியாபிட்டிய நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய வர்த்தக சங்கத்தின் தலைவரும் குளியாபிட்டிய நகர சபையின் தலைவருமான லக்ஷமன் அதிகாரி தலமையில் இன்று முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .
இதேவேளை குருணாகல் நகரில் ஒசுசல தவிற ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மே 5 வரை மூட குருணாகல் வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் இருவர் கல்கமுவ நகரில் சுற்றித் திருந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்கமுவ நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் முதலாம் திகதிவரை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஹிரிபிட்டிய, கும்புக்கெட்டே பகுதி வர்த்தக சங்கங்களும் முதலாம் திகதிவரை வர்த்தக நிலையங்களை மூட தீர்மானித்துள்ளன.