திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 2,829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 47 பேர், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகஅவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு இனம்காணப்பட்டவர்கள் பதவிசிறிபுர பகுதிசேர்ந்த இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியை ஒருவருமே தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
அத்துடன், 2,101 பேருக்கு 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில், 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாகத் தெரிவுசெய்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.