ஊரடங்கை மீறி ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மனைவியுடன் ஒரே வீட்டில் இருப்பது போரடிக்கிறது, அதனால் என் காதலியைக் காணச் செல்கிறேன் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார் ஒருவர்.
மார்ச் 17ஆம் திகதியிலிருந்து பிரான்சில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அப்படியிருந்தும் ஊரடங்கை மீறி வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்கள் மக்கள். பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டால், ஏதேதோ பதில்களை சொல்கிறார்கள் மக்கள்.
பிரான்சின் Creuse பகுதியில் ஒருவர், நான் ஊரடங்கு குறித்து கேள்விப்படவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
மற்றொருவர் சொன்ன பதிலைக் கேட்டு பொலிசாரே ஆடிப்போய் விட்டார்கள். ஒரே வீட்டுக்குள் என் மனைவியுடன் அடைந்து கிடந்து போரடித்துப்போய்விட்டது.
கண்டிப்பாக என்னுடைய காதலியைப் பார்த்தே ஆகவேண்டும், அதனால்தான் போகிறேன் என்று கூறியிருக்கிறார் Haut-Vienne என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர்.
ஒருவரிடம் எங்கே போகிறீர்கள் என்று கேட்டால், என்னுடைய செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு வாக்கிங் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அவரது செல்லப்பிராணி அவரது கழுத்தில் சுற்றியிருந்த மலைப்பாம்பு! ஒருவர், என் மனைவி நிறைய குடித்திருக்கிறாள், அவளுக்கு தப்பி ஓடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இப்படியே, கோகோ கோலா வாங்க, எலுமிச்சம்பழம் வாங்க, சன் ஸ்கிரீன் வாங்க என பலரும் பல காரணங்கள் கூற, அவை எதுவுமே பொலிசார் கொடுத்துள்ள பட்டியலில் வராததால், நல்ல ஒரு தொகையை அபராதமாக வாங்கிக்கொண்டு அவர்களை எல்லாம் வீட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார்கள் பொலிசார்.