பிரான்சில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படும் நிலையில், சைக்கிள் ஓட்டுபவர்களை ஊக்குவிப்பதற்காகவும், மாசுகட்டுப்பாட்டை தொடர்ந்து குறைப்பதற்காகவும், அரசு ஒவ்வொருவருக்கும் 50 யூரோ மானியம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, பிரான்சில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 11-ஆம் திகதி முதல் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்படவுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, காற்றில் மாசு அளவு குறைந்துள்ளது. குறிப்பாக தலைநகர் பாரிசில் காற்றின் மாசு அளவு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலையும் உள்ளது.
தற்போது இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மாசு அளவு குறைந்துள்ளதால், இதை அப்படியே கட்டுக்குள் வைக்கவும், மாசின் அளவை தொடர்ந்து குறைக்கவும், பிரான்ஸ் அரசு சைக்கிள் ஓட்டுபவர்களை ஊக்குவிப்பதற்காக, சைக்கிள் பழுது பார்க்கும் ஒவ்வொருவருக்கும் 50 யூரோ மானியம் வழங்குகிறது.
சைக்கிள்களை பழுதுபார்ப்பது, தற்காலிக பைக் பார்க்கிங் இடங்களை கட்டுவது மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி அமர்வுகளுக்கு நிதியளிப்பது ஆகியவைகளுக்காக 20 மில்லியன் யூரோ (22 மில்லியன் டொலர்) திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் Elisabeth Borne வியாழக்கிழமை அறிவித்தார்.
ஊரடங்கு தளர்வுக்கு பின், வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சமூக தூரத்தை கடைப்பிடிப்பது கடினம். பெருநகரங்கள் மற்றும் பேருந்துகளில் மக்களின் கூட்டத்தை குறைப்பதற்கும், அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டம்சைக்கிள் ஓட்டுதல் கலாச்சாரத்தை நோக்கிய ஒரு புதிய கட்டமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதாகவும், சைக்கிள் மறுசீரமைப்பின் ராணியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைப்பதாகவும், Elisabeth Borne தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு FUB, பழுதுபார்க்கும் திட்டத்திற்காக 50 யூரோ மதிப்புள்ள 300,000 காசோலைகளை அரசாங்கம் தயாரித்துள்ளது, இது வெற்றிகரமாக இருந்தால் நிச்சயமாக இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் இருக்கும் சில கார் பார்க்கிங்குகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக புதிய பைக் பாதைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் சைக்கிள் ஓட்டுதல் திட்டத்தை ஒருங்கிணைக்கும் Pierre Serne, உள்ளூர் வானொலியில், பாரிசை சுற்றியுள்ள பகுதி, தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களில் இருந்து மக்களுக்கு சைக்கிள் ஓட்டுவதை எளிதாக்கும் வகையில் துறைசார் சாலைகளில் 750 கி.மீற்றர் வரை புதிய பாதைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நகரின் பரபரப்பான மெட்ரோ வழித்தடங்களான 1, 4 மற்றும் 13 ஆகிய இடங்களில் புதிய இரு சக்கர வாகன் பாதைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு-மேற்கு முக்கிய பாதையான Rue de Rivoli சைக்கிள் ஓட்டுவதற்கு ஒதுக்கப்படும், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் அவசர வாகனங்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுகிறது.
பாரிசின் மேற்குப் பகுதியில் உள்ள La Defense மாவட்டத்துடன் இரு சக்கர வாகன் பாதை இணைப்புகளை மேம்படுத்தவும் நகரம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரிஸில் தற்போது சுமார் 370 கி.மீற்றர் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் தற்காலிகமாக 650 கி.மீற்றர் ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.