இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகள் சாலை வழியாகவே டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுள்ளார்.
கடந்த 1970-ஆம் ஆண்டில் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரிஷிகபூர்(67). அதன் பின் பாலிவுட் பிரபலமான இவர், பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
இதன் காரணமாக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா திரும்பினார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்த நிலையில், நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக ரிஷிகபூர் மும்பையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார். ரிஷி கபூருக்கு மனைவி மற்றும் மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா கபூர் சாஹ்னி ஆகியோர் உள்ளனர்.
ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹ்னிக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளார். இவர் தொழிலதிபரை மணந்து கொண்டு, டெல்லியில் வசித்து வருவதால், இந்த ஊரடங்கின் காரணமாக வாகனத்தில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால், இந்த அனுமதி கோரியிருந்தார்.
அவருக்கு மட்டும் விமானத்தில் செல்ல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் சாலைவழியே தனது உறவினர்கள் 5 பேருடன் மும்பைக்கு காரில் பயணிக்க அனுமதிக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், இரவில் தாமதமாகத்தான் அவர் அனுமதி கோரினார். இது மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் டெல்லி காவல்துறை எப்போதும் அனுமதி அளித்துள்ளது.
இப்போது அவர் சாலை வழியாகப் பயணிப்பார் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். மொத்தம் 1,400 கி.மீற்றர் பயணத்திற்குப் பிறகு ரிஷி கபூரின் மகள் மும்பையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுமார் 18 மணி நேரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.