முல்லைத்தீவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு வயோதிபர்கள் இன்று உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் புறக்கோட்டை – குணசிங்கபுர பகுதியில் இருந்து தனிமைபப்டுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட யாசகர்கள் உள்ளிட்ட குழுவில் உள்ளடங்கிய இருவரே இவ்வாரு உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை ஒருவரும் மாலை ஒருவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் சடலங்கள் மேலதிக பி.சி.ஆர். மற்றும் பிரேத பரிசோதனைகள் தொடர்பில் முள்ளியவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வீரகேசரியிடம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கும் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், முல்லைத்தீவில் விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் ஏ.என்.விஜேசிறிவர்தனவின் மேர்பார்வையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, புறக்கோட்டை – குணசிங்கபுர பகுதியில் இருந்து ஒன்று சேர்க்கப்பட்ட மக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
யாசகர்கள், கூலித் தொழிலாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் என பலரும் அதில் உள்ளடங்கியிருந்தனர்.
அவர்கள் அங்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சுமார் 80 வயது மதிக்கத் தக்க வேலு என அறியப்படும் நபர் ஒருவர் நெஞ்சுவலி என துடித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் முள்ளியவளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளார்!
பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொடர்பில் உறுதி செய்ய பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் அவருடன் இருந்த மற்றுமொரு 80 வயது மதிக்கத் தக்க வயோதிபர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
இந்த இரு உயிரிழப்புகள் தொடர்பிலும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தகவல் தருகையில்,
‘உயிரிழந்துள்ள இருவரும் சுமார் 80 வயது மதிக்கத்தக்க வயோதிபர்கள். அவர்களிடம் அடையாளத்தை உறுதி செய்ய எந்த ஆவணமும் இல்லை.
அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது கூறிய தகவல்களே அவர்கள் தொடர்பில் உள்ள ஒரே ஒரு தகவல். இவர்கள் குணசிங்கபுர பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.
உண்மையில் இவர்களின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை பிரேதபரிசோதனைகளின் பின்னரே கூற முடியும்.
அவர்கள் இருவரினதும் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. முடிவு கிடைத்த பின்னரே உறுதியாக எதனையும் கூற முடியும்.’ என்றார்.