கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் ஓரு நல்ல விடயம் நிகழ்ந்துள்ளது. அது 300,000 பிரித்தானியர்கள் புகை பிடித்தலை விட்டுவிட்டார்கள் என்பதுதான்!
ஆம், புகை பிடிப்பவர்களை கொரோனா எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் காரணமாக 300,000 பிரித்தானியர்கள் புகை பிடித்தலை விட்டுவிட்டார்கள் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
YouGov என்ற அமைப்பும் Action on Smoking and Health (Ash) என்ற பிரச்சார குழுவும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் இந்த நல்ல தகவலை அளித்துள்ளன.
மேலும், 550,000 புகை பிடிப்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்ததாகவும், 2.4 மில்லியன் பேர் புகை பிடிப்பதை குறைத்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
1,004 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2 சதவிகிதம் பேர் கொரோனா அச்சம் காரணமாக புகை பிடிப்பதை விட்டுவிட்டார்கள், 8 சதவிகிதம் பேர் புகை பிடிப்பதை விட முயற்சி செய்கிறார்கள், 36 சதவிகிதம் பேர் புகை பிடிக்கும் அளவைக் குறைத்துவிட்டார்கள் மற்றும் 27 சதவிகிதம் பேர் புகை பிடிப்பதை விட்டு விட இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.