வவுனியா இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தின் உணவில் புழு காணப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அதிரடியாக செயற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதர்கள் குறித்த உணவகத்தினை இன்று காலை 10.30 மணியளவில் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினார்கள்
குறித்த உணவகத்தினால் ஊரடங்கு காலப்பகுதியில் வீடு சென்று உணவு விநியோகிக்கும் செயற்பாடு (home delivery) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த உணவகத்தில் நேற்றிரவு home delivery மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் புழு காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சான்று பொருளுடன் (புழு காணப்பட்ட உணவுடன்) இரண்டாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள குறித்த பிரபல உணவகத்தில் பொதுசுகாதார பரிசோதர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த உணவகத்தில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறிகள் (கோவா , கரட் , கொத்துரொட்டி , நூடில்ஸ் , வெங்காயம்) , குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை கைப்பற்றிய பொதுசுகாதார பரிசோதகர்கள் அதனை எடுத்துச் சென்றதுடன் குறித்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்கு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்
இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் , மரக்கறிகள் மற்றும் புழு காணப்பட்ட உணவு ஆகியவற்றினை பொதுசுகாதார பரிசோதகர்கள் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் சான்று படுத்தியதுடன் உணவக உரிமையாளரையும் முன்னிலைப்படுத்தினர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான் குறித்த பிரபல உணவக உரிமையாளரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் பாவனைக்கு ஒவ்வாத சான்று பொருட்களை அழிக்குமாறும் உத்தரவு இட்டார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் யூலை மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.