மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள்மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஞாயிற்றுக் கிழ மை இரவு ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவின் வட்டவானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கால்நடைகள் அடிக்கடி காணாமல் போகும் நிலமை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது.இதனால் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும் இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் கால் நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் பிரதேச இளைஞர்கள் கால் நடை கடத்தல்காரர்களை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் இரவு பகலாக ஊருக்குள் காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது ஞாயிற்றுக் கிழமையன்று இரவு காட்டில் மறைந்திருந்து இவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.இதன்போது 4 பேர்கள் பிடிபட்டதுடன் ஏனையோர்கள் தப்பியோடியுள்ளனர். களவாடப்பட்ட 6 மாடுகள் மற்றும் களவிற்கு பயன்படுத்திய் வாகனம் போன்றவற்றினை இன்று திங்கள் கிழமை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.