தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ள மலையகத்தை சேர்ந்தவர்களை கட்டம் கட்டமாக அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதுடன், அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் சகல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலின் போது கொழும்பில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதானது,
தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியிருந்த மலையகத்தை சேர்ந்தவர்கள் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கொழும்பிலேயே முடக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை அனைவரும் அறிந்ததே. எனினும் அவர்கள் எவரும் கைவிடப்படவில்லை.
கொழும்பில் தங்கியுள்ள மலையகத்தவர்கள் குறித்து நான் கவனம் செலுத்தி அவர்கள் தனியுள்ள பகுதிகளில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உணவுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுத்து வருகின்றேன்.
அதேபோல் இவ்வாறு கொழும்பில் சிக்கியுள்ளவர்களை கட்டம் கட்டமாக அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரையில் 300ற்கும் மேற்பட்டோர் வரை சுகாதார பரிசோதனைகளை நிறைவுசெய்து அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்களும் அவ்வாறு அனுப்பிவைக்கப்படுவார்கள். எனவே எவரும் இதில் குழப்பமடைய அவசியம் இல்லை என்பதை கூறியுள்ளார்.