நீண்டகாலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் விடுவிக்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் , செல்வம் அடைக்கலநாதன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இன்று காலை அலரிமாளிகை கலந்துரையாடலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமரிடம் முன்வைத்த எழுத்துமூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது பிரதமருடன் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும், அதேபோல் தமிழர் பகுதிகளின் விசேட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.
குறிப்பாக விவசாயம், பண்ணை வளர்ப்பு உள்ளிட்ட விடயங்களை பலப்படுத்த வேண்டும் என்ற காரணிகளை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல் நாளாந்த வேலையாட்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காரணிகளை பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல் சுய தொழில் வாய்ப்புகளை பெருக்க அரசாங்கத்திடம் நிதி இல்லையென்றாலும் உள்ளூராட்சி சபைகளில் இடர் முகாமைத்துவ நிதி உள்ளதால் அவற்றை பெற்றுகொடுத்து மக்களுக்கான சுய தொழில்களை, விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் இதில் ஆளுநர்கள் தடையாக இருப்பதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கமாக நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருந்தாலும் கூட தேர்தல்கள் ஆணைக்குழு இப்போது தடையாக உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொது மன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
மிக நீண்டகாலமாக அவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலான காலமாக சிறைகளில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கான குறுகியகால தண்டனை வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென சுமந்திரன் எடுத்துக்கூறியுள்ளார்.
இதற்குப் பதில் தெரிவித்த பிரதமர் ,
நீண்ட காலமாக சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இவர்களை விடுதலை செய்ய முடியுமா என்பது குறித்த சட்ட முறைமைகள் என்ன என்பது கவனத்தில் கொள்ள நாம் தயராக உள்ளோம். அதேபோல் பொதுமன்னிப்பில் விடுவதென்றால் அது ஜனாதிபதியால் மாத்திரமே முடியும். எனவே அவருடன் இது குறித்து கலந்துரையாடி அவரது நிலைப்பாடு என்னவோ அதனை உங்களுக்கு அறியத்தருகிறேன் என்றுள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும் , ஜெயபுரம் பகுதிகளில் 200 ஏக்கர் நிலமும் வனப்பாதுகாப்பு திணைக்களம் தன்வசப்படுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலங்களை விடுதலை செய்தால் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமையும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்தும் உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் அந்த நிலங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேசுவதாகவும் பிரதமர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.