தமிழகத்தில் இரண்டு மகன்களுக்கும் கொரோனா தொற்று இருப்பதாலும் வசிக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதாலும் மன உளைச்சலில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர். சில தினங்களுக்கு முன்பாக இவரது இரு மகன்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த காரணத்தால் பிருந்தாவனம் மூன்றாவது தெரு சுகாதாரத் துறை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மகன்களுக்கும் தொற்று ஏற்பட்டதாலும், அவர் வசித்த பகுதி தடை செய்யப்பட்டதாலும் முதியவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
முதியவர் நேற்றிரவு தூங்கச் செல்லுமுன் குடும்பத்தாரிடம் மிகவும் மனமுடைந்த படி இதைபற்றி கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவில் இருந்து இவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மூச்சு விட மிகவும் சிரமமாக இருப்பதாக கூறி மயங்கி உள்ளார்.
உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா முதியவருக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருந்துள்ளதா அல்லது மன உளைச்சல் மட்டுமே இவரது மரணத்துக்கு காரணமா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.