பதுளை, ஹாலி-எல நாரங்கல 9ஆம் கட்டை தெப்பத்தபத்தனை பிரதேசத்தில் இன்று அதிகாலை மூன்று பிள்ளைகளின் தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த 21 வயதான இளைஞரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான ஜீ.எச் குணபால என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கொலை செய்யப்பட்ட நபரின் 15 வயதான மகளை காதலித்து வந்துள்ளதுடன் அந்த பெண்ணை கடத்திச் சென்றதாக இதற்கு முன்னர் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய குறித்த பெண்ணை சந்தேக நபர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று அதிகாலை கொலை நடந்த பின்னர், கொலையான நபரின் மனைவி, மகள் மற்றும் சந்தேகநபர் வீட்டில் இருந்து வெளியில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கொலையான நபரின் மனைவி, சந்தேகநபரையும் மகளையும் சந்தேகநபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் கணவன், பிள்ளைகளை தாக்கியதால் தான் தனது கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற பதுளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஹாலி – எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நடத்திய விசாரணையில், மகளுடன் வாழ்ந்து வந்த இளைஞரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்கேநபரை கைது செய்த பொலிஸார், கொலை செய்ய பயன்படுத்தி கோடாரியையும் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் குறித்து ஹாலி – எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.