உடலிலுள்ள செல்களை கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்கும் ஆன்டிபாடி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்றை உருவாக்குவதில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள SARS-CoV-2 வைரஸ், ஒரு செல்லை தொற்றுவதை தடுக்கும் ஆன்டிபாடி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
47D11 என்று அழைக்கப்படும் இந்த ஆன்டிபாடி, கொரோனா வைரஸின் உடலில் அமைந்துள்ள ஊசிகள் போன்ற பகுதியில் அமைந்திருக்கும் புரதத்தை (spike protein) குறி வைத்து தாக்குகிறது.
இந்த spike proteinதான், அதாவது கொரோனா வைரஸின் உடலில் அமைந்துள்ள ஊசிகள் போன்ற அமைப்பை வைத்துத்தான் கொரோனா வைரஸ், மனித உடலிலுள்ள செல்கள் மீது ஒட்டிக்கொண்டு, தனது மரபுப்பொருளை அந்த செல்லுக்குள் செலுத்தும்.
தற்போது எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த 47D11 என்று அழைக்கப்படும் ஆன்டிபாடி, அந்த ஊசிகள் போன்ற பகுதியில் அமைந்திருக்கும் புரதத்தின் மீது அமர்ந்து, அது செல்களை பிடிப்பதை தடுப்பது தெரியவந்துள்ளது.
ஆதாவது அந்த புரதத்தை இந்த ஆன்டிபாடி செயலிழக்கச் செய்கிறது. இந்த அரிய கண்டுபிடிப்பு கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்றை உருவாக்குவதற்கான ஒருநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.