300 கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வின் தகவல்படி பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதன்படி 6000ஆண்டு காலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதை இது காட்டுகிறது.
இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏழை நாடுகளில் இந்த வெப்பநிலையை சமாளிக்க பலரால் முடியாத சூழல் ஏற்படும் என இந்த ஆய்வு கவலை தெரிவிக்கிறது.
பருவநிலை நிபுணரான லெண்டன் என்பவர் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்த இந்த ஆய்வை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.