ஐக்கிய அரபு நாடுகளில் வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் எனப் பல இந்தியர்களுடன் உயிரிழந்த கணவரின் உடலுடன் சென்னை திரும்பியுள்ளார் பெண் ஒருவர்.
துபாய் மாகாணத்தில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம், 182 தமிழா்கள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை திரும்பினா்.
இவர்களில் ஒருவராக, நொறுங்கிய இதயத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் 29 வயதான கொல்லம்மாள்.
இவருடைய கணவர் குமாரின் (35) உடலும் இதே விமானத்தில் சரக்குப் பகுதியில் வைத்து சென்னை எடுத்துவரப்பட்டது.
ஐக்கிய அமீரகத்தின் ராஸ் அல் கைம்மா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் குமார்.
இவர் பணியின்போது ஏப்ரல் 13 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
“வழக்கம் போல காலை உணவை சாப்பிட்டுவிட்டு பணிக்குச் சென்றார், காலை 10 மணியிருக்கும், அவர் பணியாற்றும் வளாகத்தில் இருந்து காவலாளி ஓடி வந்து,
கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், அங்கு அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள்.
ஆனால், மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை. பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள்” என்று கண்ணீரோடு கூறுகிறார் கொல்லம்மாள்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எங்களுக்கு திருமணம் ஆனது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நானும் அவருடன் துபாய் சென்றேன்.
எனக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர், அவரது உடலை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றுக்காக மட்டுமே இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன்.
இதுவரை எங்குமே நான் தனியாகச் சென்றது இல்லை. இன்று வாழ்க்கையிலேயே என்னைத் தனியாகவிட்டு விட்டுச் சென்றுவிட்டார்.
இதுதான் நான் தனியாகப் பயணிக்கும் முதல் பயணம். யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது” என்று கண்ணீரைத் துடைத்தபடி கூறுகிறார் கொல்லம்மாள்.
இவருடன் 200 தொழிலாளர்கள், 37 கர்ப்பிணிகள், சில குழந்தைகள், 42 மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் என இரண்டு ஏர் இந்தியா விரைவு விமானம் மூலம் சுமார் 360 பயணிகள் துபையில் இருந்து சென்னை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.