பிரித்தானியாவில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான முக கவசங்களை வேன்களில் வந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் புகழ் பெற்ற தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட்.
இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான (இலங்கை மதிப்பில் பணத்துக்கு 3,70,23,066 கோடி ரூபாய்) 80 ஆயிரம் முக கவசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வேன்களில் வந்த 3 மர்ம நபர்கள் இந்த குடோனுக்குள் புகுந்து 80 ஆயிரம் முக கவசங்களையும் திருடினர். பின்னர் தாங்கள் வந்த வேன்களில் அவற்றை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுகாதார சேவை பணியாளர்களுக்கு தேவைப்படும் சுய பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் 80 ஆயிரம் முக கவசங்கள் திருடு போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு மான்செஸ்டர் நகர பொலிசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.