இன்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 6 கடற்படை வீரர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இன்று கண்டறியப்பட்ட 9 தொற்றாளர்களில் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக டுபாயில் இருந்த வந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரும் உள்ளடங்குகின்றனர்.
டுபாயில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த 7 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து யூ.எல். 303 விமானத்தினூடாக 197 பேர் நாட்டை வந்தடைந்தனர்.
டுபாயிலிருந்த இலங்கையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அங்கு வசித்து வந்த சிலரும் இதில் அடங்குகின்றனர்.
அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களுக்கான ஆரம்பக்கட்ட உடல் உஷ்ணத்தை அளவிடும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அந்நபருக்கு காய்ச்சல் நிலைமை உள்ளமை தெரியவரவே, குறித்த நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியானது. அந்த விமானத்தில் வந்த ஏனையோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள நிலையில் இன்று அவர்களில் இருவருக்கே கொரோனா இருப்பது உறுதியானது.