தமிழகத்தில் 11 வயது சிறுவனின் தாய் கொரோனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த தந்தையின் உடலை அடக்க செய்யமுடியாமல் சிறுவன் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்.
இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அய்யனாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடையவே, கடந்த 7-ம் திகதி மருத்துவர்கள் அவரை ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
வீடு திரும்பிய அவர் உயிருக்கு போராடும் நிலைக்கு ஆளானார். அவரின் மனைவி மற்றும் தாய் இருவரும் கவனித்து வந்த சூழலில், வெள்ளிக்கிழமை மாலை அன்று, இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி, சுகாதாரத்துறை அலுவலர்கள் அவர்களை அழைத்துச் சென்று, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர்.
வீட்டில் இருந்த அய்யனாரின் அருகே, அவரது 11 வயது மகன் ஜீவா மட்டுமே இருக்க, உதவிக்கு யாரும் இல்லாததால், சில நிமிடங்களிலேயே அய்யனாரின் உயிர் பிரிந்தது.
தன் கண் முன்னே தந்தை உயிர் பிரிந்ததை கண்டு செய்வதறியாமல் திகைத்த சிறுவன், உடலை அடக்கம் செய்யவேண்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளான். ஆனால் உதவி செய்ய ஒருவர் கூட முன்வராததால், தந்தையின் உடல் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்துள்ளான் ஜீவா.
இந்தநிலையில், இத்துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த தாசில்தார் பார்த்திபன், அய்யனாரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். முழு உடல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், அவரது உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
தந்தை மரணம் ஒருபுறம், தாய்க்கு கொரோனா நோய் தொற்று மறுபுறம் என்று தனிமரமாய் தவிக்கும் சிறுவன் ஜீவாவின் கண்களில் படர்ந்துள்ள சோகம், காண்போரின் கண்களை குளமாக்கியது.