நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்துச் சேவை இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அந்தவகையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய தொடருந்து சேவைகளை ஒதுக்குவதற்கு நாளை தொடக்கம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும், நாட்டின் அனைத்து இடங்களுக்கும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படுகிறதாகவும் கூறபப்ட்டுள்ளது..
மேலும் ரயில்வே பருவகாலச் சிட்டைகள் மற்றும் சீசன் டிக்கெட் அல்லாத டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் – 19 தொற்றுநோயைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தல்களின்படி அத்தியாவசியப் பணிகளைத் தவிர, பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.