பிரித்தானியாவில் உள்ள மருத்துமனையில் பணிபுரிந்த கேரள பெண் மருத்துவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் பூர்ணிமா நாயர். இவர் பிரித்தானியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூர்ணிமாவின் இறப்பு குறித்து மருத்துவமனை வளாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எங்களின் மதிப்புமிக்க தோழியான பூர்ணிமா நாயர் கொரோனாவிற்குப் பலியாகி விட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் கொரோனாவை தனது முழு பலம் கொண்டு எதிர்த்தார். அவரின் இறப்புச் செய்தி எங்கள் இதயத்தைச் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய எங்களுடன் சேர்ந்து நீங்களும், பிரார்த்தனை செய்வீர்கள் என நம்புகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்ணிமா மருத்துவராக பணியாற்றி பல நோயாளிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அப்படி காப்பாற்றப்பட்ட நோயாளி ஒருவரின் மகள் கூறுகையில், பூர்ணிமா மிக திறமையான மருத்துவர், என் தாயை உயிர் கொல்லி நோயில் இருந்து அவர் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுத்தார்.
என் மொத்த குடும்பமும் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளது, ஆனால் பூர்ணிமாவின் வாழ்க்கையில் நடுவிலேயே முடிந்துவிட்டது சோகமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ளார்.