அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட புளொட் போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது என ஈழத்தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
2009ம் ஆண்டுக்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டு குழுக்களாக செயற்பட்டு மக்களை துன்புறுத்திய புளொட் அமைப்பை போன்ற ஆயுதக்குழுக்கள் தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.
குறிப்பாக 2009ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தல் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று விடுவார்கள். எனவே அவர்களை அழிக்க வேண்டும் என கூறினார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது புளொட் அமைப்பு விடுதலைப் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்படவுமில்லை.
அவர்கள் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தான் கூட்டமைப்பில் இணைந்தார்கள்.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் அற்றவர் என மேலும் தெரிவித்தார்.