வடமராட்சியின் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் கும்பல் ஒன்றினை பொலிஸார் கைதுசெய்துள்ளநிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடுப்பிட்டி வர்த்தக நிலையமொன்றில் ஊரடங்கு வேளையில் சிகரட் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை திருடிய கும்பல் ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் விரித்த வலையில் இந்த கும்பல் அகப்பட்டுள்ளது.
தமது சுகபோகத்திற்காக வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இக்கும்பல் அந்த பணத்தில் கெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்து வகை தொகையின்றி பாடசாலை மாணவர்களிற்கு இலவசமாக வழங்கி அவர்களையும் போதைப்பொருளிற்கு அடிமையாக்கியுள்ளது.
அத்துடன் வீட்டில் தனித்திருந்த பெண்களை தாக்கி சுமார் 45இலட்சம் பணம் கொள்ளையிடப்பட்டமை மற்றும் பகல்வேளையில் வீட்டின் கதவை உடைத்து நடைபெற்ற நகை திருட்டு உள்ளிட்ட பல கொள்ளைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தவண்ணமுள்ளது.
இக்கும்பல் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நடைபெற்ற எட்டுக்கொள்ளைகளில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ள நிலையில் கடந்த மூன்று வருடங்களில் நடைபெற்ற பாரிய கொள்ளைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொள்ளை கும்பலை சேர்ந்த நபரொருவர் மாடி வீடு மற்றும் கடைத்தொகுதியென திருட்டு பொருட்களை முதலிட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
இதேவேளை கொள்ளைகளையடுத்து தேடப்பட்டு வந்த முக்கிய கொள்ளை சந்தேகநபர் ஒருவர் தப்பித்துக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண் அடைய முற்பட்டபோது மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் சந்தேக நபரை திருப்பி அனுப்பியிருந்த நிலையில் பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
அவர் வழங்கிய தகவலையடுத்து உடுப்பிட்டி, யாழ்.வீதியை சேர்ந்த மற்றொரு நபர் கைதாகியுள்ளார். இந்நபரே கொள்ளையின் மூலம் மாடி வீடு,வர்த்தக கடைத்தொகுதியென இருந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைதாகியுள்ள நிலையில் கும்பலை சேர்ந்த மேலும் சிலரையும் பொலிஸார் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை பொலிஸ்நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி மற்றும் விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக கொள்ளை கும்பல்கள் பிடிபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் அண்மையில் வல்வெட்டியை சேர்ந்த கும்பல் அகப்பட்டிருந்ததுடன் அவர்களிடம் தங்கம் வாங்கிய நகை கடை உரிமையாளரது மனைவியும் கைதாகியிருந்தார்.
குறிப்பாக இக்குழுவினர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டமை கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாடசாலைகள் முடங்கியுள்ள நிலையில் மாணவர்களிடையே போதைபொருள் விநியோகித்து மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே சீரழிக்க முற்பட்ட குழுவினர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.