கொரோனா வைரஸின் அறிகுறிகளின் பட்டியலில் சுவை மற்றும் மணத்தை இழப்பது சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த அறிகுறி கொண்டவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக, தொடர் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்றவை தான் இருந்தது.
இந்த அறிகுறி கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின் நோயாளிகளின் எண்ணிக்கை கூட, கூட அவர்களை மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது, கொரோனாவின் அறிகுறிகள் இருமல், சளி மட்டுமின்றி, கை தசைகள் வலிப்பது, உடல் வலிப்பது, சோர்வு, வயிற்று வலி, பசியின்மை போன்றவையும் அறிகுறிகளாக உள்ளதாக கூறப்பட்டது.
அதன் பின் சுவை மற்றும் மணத்தை உங்களால் அறியமுடியவில்லை என்றால், அதுவும் கொரோனாவின் அறிகுறி என்று தான் கூறப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர்Jonathan Van-Tam, வாசனை அல்லது சுவை இழப்பு NHS கொரோனா வைரஸ் அறிகுறிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், குறிப்பிட்ட அறிகுறி கொண்டவர்கள், மற்றவர்களுடன் வசித்து வந்தால், அவர்கள் 7 நாட்கள் வீட்டிலே இருக்க வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க மற்ற வீட்டின் உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரிகள், மருத்துவர் பிராங்க் ஏதர்டன் (வேல்ஸ்), மருத்துவர் மைக்கேல் மெக்பிரைட் (வடக்கு அயர்லாந்து), மருத்துவர் கிரிகோர் ஸ்மித் (ஸ்காட்லாந்து) மற்றும் பேராசிரியர் கிறிஸ் விட்டி (இங்கிலாந்து) ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இன்று முதல், அனைத்து தனிநபர்களும் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதாவது, அவர்கள் ஒரு புதிய தொடர்ச்சியான இருமல், காய்ச்சலை தொடர்ந்து அனோஸ்மியா இருந்தால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனோஸ்மியா என்பது உங்கள் சாதாரண வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகும்.
கொரோனாவால் வளர்ந்து வரும் தரவுகளையும் ஆதாரங்களையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், முழுமையான பரிசீலனைக்குப் பிறகு, இந்த புதிய நடவடிக்கையை பரிந்துரைக்கும் அளவுக்கு நாங்கள் இப்போது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தற்போதைய வழிகாட்டுதல்களின்படி தனிநபரின்(சுவை மற்றும் மணம் இழந்திருக்கும் அறிகுறி இருந்தால்) குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அந்த நபர் ஏழு நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.