சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இறந்து பல வாரங்களான பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
மருத்துவ சோதனைகளுக்கு பின்னரே அவர் எப்போது இறந்தார் என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
பெர்ன் நகரின் Holligenstrasse பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல காலமாக வசித்து வந்தவர் 61 வயதான குறித்த பெண்மணி.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே குறித்த பெண்மணியை அண்டை வீட்டார் எவரும் பல நாட்களாக பார்த்ததில்லை என்கின்றனர்.
அவரது குடியிருப்பானது 8-வது மாடியில் அமைந்துள்ளது. எப்போதும் மூடிய நிலையிலேயே இருந்துள்ளது. மட்டுமின்றி, அவருக்கான கடிதங்களையும் அவர் கண்டு கொள்ளாதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வாரம் கடந்த நிலையில், கவலையடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த குடியிருப்பின் மேலாளரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, உரிய நபரின் அனுமதியின்றி நடவடிக்கை மேற்கொள்வது அத்துமீறுவது போன்றது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 5 முறையேனும், அப்பகுதி மக்கள் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்க கோரியுள்ளனர்.
ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் சுமார் 6 வாரங்களுக்கு பின்னர் மே மாத மத்தியப்பகுதியில், அந்த குடியிருப்பில் இருந்து துர் வாடை வீசுவதாக தெரியவந்தது.
இதனையடுத்து மீண்டும், கடந்த வெள்ளியன்று, இப்போதேனும் பொலிசாரின் உதவியை நாட குடியிருப்பாளர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த பொலிசார், வாசலை உடைத்து குடியிருப்புக்கு உள்ளே சென்றனர். உள்ளேயிருந்து மனம் புரட்டும் வகையில் துர் வாடை வீசியுள்ளது.
அங்கே அந்த 61 வயது பெண்மணியின் சடலம் மிகவும் மோசமான நிலையில் சிதைந்து காணப்பட்டது.
அவரது மரணம் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் ஏதும் இல்லை எனவும், இருப்பினும் விசாரணைக்கு பின்னரே உறுதியான தகவல் தெரியவரும் என மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.