பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இன்று முதன் முறையாக கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் அதன் மிகக் குறைந்த நிலையை பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மருத்துவமனை இறப்பு எண்ணிக்கை 77 என பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அனைத்து கடைகளும் ஜூன் 15 முதல் திறக்க ஆவன செய்யப்படும் என்றார்.
மேலும் வெளிப்புற சந்தைகள் மற்றும் கார் ஷோரூம்கள் அனைத்தும் ஜூன் 1 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என்றார்.
ஆனால் கண்டிப்பாக சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக பரவல் தற்போது கட்டுக்குள் இருப்பதால், சில்லறை வர்த்தக ஸ்தாபனங்களை திறப்பதில் சிக்கல் இருக்காது என நம்புவதாக பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் சமூக விலகல் வழிகாட்டுதல்களை அரசாங்கம் இன்று வெளியிடும் என்று ஜான்சன் கூறினார்.
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என்பதை இது உறுதி செய்யும்.
மட்டுமின்றி, இந்த நிபந்தனைகளை தேவைப்படும் இடத்தில் செயல்படுத்த எங்களுக்கு நிச்சயமாக அதிகாரங்கள் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.