மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலம் இன்று மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
தற்போது கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமானின் உடலத்துக்கு நேற்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்போது படைதரப்பினர் முழுமையாக சுகாதார இடைவெளிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 26ம் திகதியன்று கொழும்பில் உள்ள தமது இல்லத்தில் சுகவீனமடைந்த ஆறுமுகன் தொண்டமான், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் அவரின் உடலம் கொழும்பு இல்லம், நாடாளுமன்றம், சௌமியபவான் ஆகிய இடங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் அவரின் சொந்த பெருந்தோட்டமான வெவண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உடலம் நுவரெலிய வழியாக நானுஓயா, லிந்துல, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு எடுத்துவரப்பட்டது.
இந்தநிலையில் இன்று மாலை அவரின் உடலம் அக்கினியுடன் சங்கமிக்கவுள்ளது.