நடிகர் மனோபாலா மீது நடிகர் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் நடிகர், நடிகைகளின் பேட்டியை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார். அதில் சிங்கமுத்து வடிவேலு பற்றி தவறானச் செய்திகளை கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது,
நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன். நடிகர் சங்கத்துக்காக என்னால் முடிந்த சில உதவிகளை செய்து வருகிறேன்.
நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட்பேப்பர் என்ற யூடியூப் சேனலில், நடிகர் சிங்கமுத்துவிடம் என்னைப் பற்றி சில கேள்விகளை கேட்க, அதற்கு அவர், என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறானச் செய்திகளையும் பொய் பிரசாரம் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை, தென்னிந்திய நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் வெளியிட்டுள்ளார்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஏற்கெனவே எனக்கும் சிங்கமுத்துவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதனால் நடிகர் மனோபாலா மீதும் சிங்கமுத்து மீதும் நடிகர் சங்கத்தின் சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.