இந்தியாவில் திருமணமான இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை கொலை செய்துவிட்டதாக பெண்ணின் பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பவருக்கும் பாரதி (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது.
ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் பாரதி கடந்த 25ஆம் திகதி கடுமையான தீக்காயத்துடன் வீட்டில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பாரதி தற்கொலை செய்து கொண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கூறினர்.
ஆனால் இது தொடர்பில் பாரதி பெற்றோர் அதிர்ச்சி புகாரை அளித்துள்ளனர்.
அதில், திருமணத்தின் போது 200 கிராம் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம்.
ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தி வந்ததோடு எங்களை மிரட்டினார்கள்.
மேலும் பணம் தரவில்லை என்றால் இரண்டாம் திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மிரட்டினார்.
அதனால் என் மகளை அவர்கள் தீவைத்து எரித்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகம் ஆடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.