நாடாளுமன்றை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது என பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்து உத்தரவு பிறப்பித்த பின்னர் அந்த தீர்மானத்தை திருத்தி அமைக்கவோ, உத்தரவினை வாபஸ் பெற்றுக்கொள்ளவோ ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பில் சந்தர்ப்பம் கிடையாது.
நாடாளுமன்றை கலைப்பது குறித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததனைத் தொடர்ந்து தேர்தல் குறித்த அனைத்து செயன்முறைகளும் தேர்தல் ஆணைக்குழுவினைச் சாரும்.
தேர்தல் நடத்தும் தினத்தை தேர்தல் ஆணைக்குழு மாற்றினாலும் அந்த விவகாரத்தில் ஜனாதிபதியினால் தலையீடு செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றை கலைப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 3 மாத காலப் பகுதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பிட்ட 3 மாத காலப் பகுதியில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதி மீளவும் புதிய ஓர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ளார்.