சுமார் நான்கே வருட காலம் ஆட்சியில் பங்காளியாக இருந்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக வரலாற்றில் பல சாதனைகளை செய்து முடித்துள்ளது.
இலங்கையில் மாறி, மாறி வந்த அரசாங்கங்களில், 1978ம் ஆண்டு முதல் சுமார் 38 வருடங்கள் ஆட்சியில் இருந்த, பல மலையக கட்சிகளின் சாதிப்பு எமது இந்த நான்கு வருட சாதனை பட்டியல் நினைவில் நிற்கும்படியாக உள்ளதை கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் இன்று நினைவு கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
2015ம் வருடம் ஜூன் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையிட்டு கருத்து கூறியுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார பரப்பின் சகல துறைகளையும் குறுக்கு வெட்டாக ஊடறுத்து சென்றுள்ளது.
எமது கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், எமது பொது செயலாளராக அன்டன் லோரன்ஸ் மற்றும் இன்றைய பொது செயலாளர் சந்திரா சாப்டர் உட்பட எமது ஆலோசகர்களாக இருந்த வாமதேவன் மற்றும் பெ. முத்துலிங்கம் ஆகியோரின் பங்களிப்பில் இந்த சாதனைக நிகழ்த்தப்பட்டுள்ளன.
எமது முதற்கட்ட கட்டமைப்பு சாதனை பட்டியலை இன்று வெளியிடுகிறேன். இது தவிர நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் வாடா கிழக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றில் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அடுத்த பட்டியலில் வெளியிட உள்ளேன்.
முதற்கட்ட கட்டமைப்பு பட்டியல்:
- தொழிலாளர் குடும்பங்களுக்கு தோட்டங்களில் “ஏழு பேர்ச் காணி” வழங்களுக்கான இலங்கை அரசின் அமைச்சரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- “நாங்கள் இனிமேலும் நாட்கூலி தொழிலாளர்களாக இருக்க மாட்டோம், எதிர்காலத்தில், கிராமவாசிகளாக மாறுவோம்” என்ற கொள்கையின்படி, மலையகத்தின் புத்தெழுச்சியை உறுதிப்படுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின் பேரில், “மலையக புதிய கிராமங்கள்..” என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டது.
- நான்கு வருடங்களாக ஆரம்பிக்கப்படாமல் நின்று போயிருந்த “இந்திய அரசின் வீடமைப்பு உதவி திட்டம்”, இந்திய அரசாங்கத்துடன், எமது “புதிய மலைநாட்டு கிராமங்கள்…” அமைச்சு கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
- அமைச்சரவை பத்திரத்தின்படி எமது நல்லாட்சி அரசு வழங்கிய சொந்த காணிகளில் சொந்த உறுதி பத்திரம் கொண்ட “தனி வீடுகள்” மலைநாட்டில் கட்டப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
- கடந்த காலத்தின் “லயன் குடியிருப்பு“ என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து, கட்டப்படும் அக்குடியிருப்புகள், “மலையக தமிழ் கிராமங்களாக” அறிவிக்கப்படும் நடைமுறை ஆரம்பமானது.
- அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின்படி “மலையக அபிவிருத்திக்கான அதிகார சபை” உருவாக்கப்பட்டது.
- மலையகத்தில் அரசியல் அதிகார பகிர்வு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில், “புதிய ஆறு பிரதேச சபைகள்” அமைக்கபட்டன.
- புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமானது.
- “மலையக மக்களால் வாக்களித்து பிரதேச சபைகளை தெரிவு செய்யும் பிரதேச சபைகளால், தோட்ட புறங்களுக்கு நிதி ஒதுக்கி, அபிவிருத்தி செய்ய முடியாது” என்ற 30 வருட அடிமை சட்ட விதி அமைச்சரவையில் தூக்கி எறியப்பட்டு, மலையக தோட்டப்புற பிரதேச சபைகளின் அதிகார எல்லை 33ம் விதி சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.
- சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக அண்மை காணிகளை பிரித்து வழங்குதல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில் காத்திரமான சம பங்கும், அந்தஸ்தும் வழங்கப்படுவது, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டி, அவர்களை வெளிப்பயிர்செய்கை வருமான திட்டத்தின் அடிப்படையில் “மலையக தமிழ் விவசாயி”யாக மாற்றும் சிறுநில உடைமையாளர் திட்டம், கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- “மலையக பல்கலைக்கழகம்” பற்றிய சாத்தியப்பாட்டு அறிக்கை, மலையக சான்றோர் குழுவினாரால் தயாரிக்கப்பட்டு, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.