பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்தும், பொதுத் தேர்தலை நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய ஆயத்தங்கள் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி தீர்மானிக்குமென கூறப்பட்ட போதிலும் இன்றைய தினம் அதற்கான எந்தவித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
சுகாதார அதிகாரிகளுடன் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கூட்டத்தை முடிந்துள்ளனர். தேர்தல் திகதி குறித்து எதிர்வரும் 8 ஆம் திகதி கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் தேர்தல் திகதி குறித்து ஆராய இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதி குறித்தோ அல்லது தேர்தல் குறித்த வேறெந்த காரணிகள் குறித்தோ கூட்டத்தில் ஆராயவில்லை.
எனினும் சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மாத்திரம் இன்றைய தினம் தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் தேர்தலை நடத்தினால் எவ்வாறான சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளில் எவ்வாறான மாற்றங்களை செய்ய வேண்டும், சமூக இடைவெளி, மக்களின் பாதுகாப்பு, நோய் தொற்றுகள் ஏற்படும் பிரதான காரணிகள் என்ன என்பதெல்லாம் கலந்துரையாடப்பட்டது. எனினும் சுகாதார அதிகாரிகளின் யோசனைகள் குறித்து இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
எவ்வாறு இருப்பினும் தேர்தல் திகதி குறித்தும், தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்தும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதை ஆராய்வது குறித்தும் தேர்தல்கள் ஆணைகுழு அடுத்த வாரம் பேச்சுவாரத்தை நடத்தவுள்ளனர்.
இன்று தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருகின்ற காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை 8 ஆம் திகதி காலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.