தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று முத்திரைக்குத்திக் கொள்ள வேண்டும் என்றால், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க, ஜனநாயக ஆட்சிக்கு சுயாதீன ஆணைக்குழுக்களே துணைநிற்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
பொதுத் தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்ற தீர்மானம் அற்ற நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளதைப் போன்று நாட்டுக்கு பொருத்தமற்ற விம்பமொன்று தற்போது உருவாக்கப்பட்டு வருவதை அவதானிக் கூடியதாக இருக்கின்றது.
அந்த விம்பம் தான் அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கான முயற்சியாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்த்தின் ஊடாக 9 சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.இவற்றின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிட முயற்சிக்கின்றது.
கடந்த அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றிப் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்களது கட்சி வெற்றிப் பெற்றபோது சிறந்ததாக தெரிந்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது சிக்கலாக விளங்குவதற்கான காரணம் என்ன? இந்த சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
அரசதரப்பினர் நேரடியாகவே ஆணைக்குழுக்களை விமர்சிப்பதால் மக்களது நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்ற முத்திரையை தற்போதைய அரசாங்கம் குத்திக் கொள்ள வேண்டும் என்றால் , சுயாதீன ஆணைக்குழுகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அமைச்சர் விமல் வீரவன்ச சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது முன்வைத்த விமர்சனம் , அனைவராலும் புறக்கணிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறு முறைக்கேடாக கருத்து தெரிவிக்கும் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளின் கருத்துகளினாலே அரசியல் துறையே தலைகுனியவேண்டி ஏற்படுகின்றது.
அதனால்’ மக்கள் நன்கு சிந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் போன்றோரை நிராகரிக்க வேண்டும்.