ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும்.
தேரர் அவர்களின் வருகை இலங்கைத் தீவில் சமயம், கலாசாரம், சமூக மற்றும் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பண்பாட்டு ரீதியான மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னர் மஹிந்த தேரருக்கும் அப்போதைய அரசராக இருந்த தேவநம்பியதிஸ்ஸ மன்னருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது சமூக பெறுமானங்கள், பொருளாதாரம், இலக்கியம், கலைகள் மட்டுமன்றி கைவினை முறைமைகள் கூட புதிய பரிமாணத்தை பெற்றது.
வானளாவ உயர்ந்த தாகபைகள், பெரும் சமுத்திரங்களை ஒத்த குளங்கள், நாட்டை தன்னிறைவடையச் செய்த விவசாய கலாசாரம், உலகமே வியக்கும் கலைப் படைப்புகள், இவற்றுக்கெல்லாம் மேலாக புத்த பெருமானின் அட்டாங்க மார்க்கம் என்ற எண்வகை நெறிகளால் போசிக்கப்பட்ட, நீர், நிலம், தாவரங்கள், சூழல் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நீதி செலுத்தும், மிதவாத வாழ்க்கை முறையை கொண்ட, இலங்கை பௌத்தர்கள் உருவானதும் இந்த சமூக, கலாசார புரட்சியின் மூலமாகவேயாகும்.
மஹிந்த தேரர் போதித்த சமய மற்றும் வாழ்க்கை நெறியின் அடிப்படையிலேயே நாம் ஒரு கீர்த்திமிக்க தேசமாக முன்னோக்கிப் பயணித்திருக்கின்றோம். ஈருலகினதும் நன்மைக்காக சமய நன்நெறிகளின் அடிப்படையிலான ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை உருவாக்குவதற்கும் அது அடித்தளமாக அமைந்தது.
எனவே, கடந்த காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்கும் நாம் ஒரு தேசமாக பெற்றுள்ள பெறுமதிவாய்ந்த மரபுரிமையான பௌத்த சமயம் எமக்குக் கிடைக்கப்பெற்ற உன்னத தினம் பொசன் நோன்மதி தினமாகும் என்பது அனைத்து உள்ளங்களிலும் ஆழப் பதிந்துள்ளது.வரலாற்றிலிருந்து பெற்ற அனுபவங்கள் மற்றும் பௌத்த சமயத்தின் மூலம் கிடைத்த செல்வாக்கிற்கு அமைவாகவே நாம் ஒரு சுபீட்சமான தேசத்தை நோக்கி நாட்டை வழிநடத்துகின்றோம்.
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும். இந்த அடிப்படையிலிருந்தே எனது அரசாங்கம் நிகழ்காலத்திற்கு மட்டுமன்றி எதிர்காலத்திற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.
நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை. மேற்குறித்த அடிப்படையிலல்லாத ஒரு பயணம் இலங்கையர்களான எமக்கு இல்லை.
இவ்வருட பொசன் பண்டிகை காலம் சமூகத்தையும் வாழ்க்கையையும் பௌத்த சமய போதனைகளுக்கு ஏற்ப யதார்த்தமாக பார்ப்பதற்கும், அகிம்சாவாத பௌத்த சமயத்தின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்குமான சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வதே மஹிந்த தேரருக்கு செய்யக்கூடிய உயர்ந்த கௌரவமாகும் என நான் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் புண்ணியமிகு பொசன் பண்டிகை வாழ்த்துக்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.