அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும், கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அப்படி ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு பேரணிக்கு திடீரென வந்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அவருக்கு பலர் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் சிலவற்றையும் அவர் சந்திக்க நேர்ந்தது.
திடீரென கூட்டத்தில் ஒருவர், கருப்பு முகமே வீட்டுக்கு போ என சத்தமிட்டார். இன்னும் சிலர், ட்ரம்பை எதிர்த்து நில் என்றும் சத்தமிட்டார்கள்.
அமெரிக்காவில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தும் ட்ரம்பின் திட்டம் குறித்து கேட்டபோது, சட்டென பதிலளிக்காமல் 20 விநாடிகள் ட்ரூடோ அமைதியாக நின்றதைக் குறிக்கும் வகையில் மக்கள் இப்படி சத்தமிட்டார்கள்.
இதற்கிடையில் பேரணிக்கு வந்த ட்ரூடோ, யாரும் எதிர்பாராத நேரத்தில் கருப்பினத்தவருக்கு ஆதரவாக சாலையிலேயே சட்டென முழங்காலிட, கூட்டம் ஆர்ப்பரித்தது.
ஆனால், ட்விட்டரில் கடும் கேலி கிண்டலுக்குள்ளாகியிருக்கிறார் ட்ரூடோ. கடந்த ஆண்டு, ட்ரூடோ முகத்தில் கருப்பு வண்ணம் தீட்டியிருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தான் ஆசிரியராக இருக்கும்போது ஆயிரத்தோர் இரவுகள் நாடகத்தில் நடிக்கும்போது ட்ரூடோ போட்ட வேடம் அது.
பின்னர் ட்ரூடோ தான் கருப்பு முகம் காட்டியதற்காக மன்னிப்பும் கேட்டார். என்றாலும் மக்களால் அதை மறக்க முடியவில்லை.
கருப்பு முகம் காட்ட முடியாததால்தான் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தார் ட்ரூடோ என்று ஒருவரும், கருப்பு முகம் காட்டுவதும் ஒன்றுதான், கருப்பு மாஸ்க் அணிவதும் ஒன்றுதான் என்று மற்றொருவரும் ட்வீட்டியிருந்தனர்.