தமிழகத்தில் கணவனின் கொலைக்கு பழிவாங்க, பிரபல ரவுடியை மருத்துவமனைக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்வதற்கு திட்டம் போட்டு கொடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்த ரவுடி கரும்பாலை முருகன் என்பவர் விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 5-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த முருகனை திங்கட்கிழமை அதிகாலையில் மருத்துவமனைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கார்த்திக் விசாரணை நடத்தினார்.
கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் ஒரு பெண்ணின் தூண்டுதலின் பேரில் அதிகாலையில் அரசு மருத்துவமனையில் இருக்கும் பாதுகாப்பு குறைபாட்டை அறிந்து இந்த கொடூர கொலை சம்பவத்தை நடத்தியிருப்பது தெரிய வந்தது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு வைகையாற்றின் மைய மண்டப பகுதியில் வைத்து கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கரும்பாலை முருகன் 2 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
தனது கணவரைக் கொன்ற கும்பலை கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரனின் மனைவி ராஜேஸ்வரி திட்டம் போட்டு ஒவ்வொருவராக பழிக்கு பழி வாங்க திட்டமிட்டதாகக் கூறப்படுகின்றது.
பட்டா ராஜேந்திரனை கொன்றவர்களின் முதல் குற்றவாளியான சந்துருவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயற்சி செய்துள்ளனர். அவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
தற்போது இரண்டாவது குற்றவாளியான கரும்பாலை முருகனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் புகுந்து சினிமா பாணியில கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கரும்பாலை பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகிய மூவரும் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.