புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜாவை வவுனியா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி காரியாலயத்தில் சந்திப்பினை மேற்கொண்டனர்.
இதன் போது கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பில் நிபந்தனைகள் உள்ளடங்கிய கடிதமொன்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இக் கடிதம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுப்பதாக மாவை சேனாதிராவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.
இதன் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட நிபந்தனைகளாவன,
எமது இனத்தின் நலனையும், கூட்டமைப்பின் நலனையும், எமது கட்சியின் எதிர்கால நலனையும் கருத்திற்கொண்டு ஒரு சில இணக்கப்பாட்டுடனான நிபந்தனைகள் பின்வருமாறு,
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியினைச் சிதறடித்து பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன் பல புதிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இவற்றினை முறியடித்து வாக்குகளை சிதறடிக்காமல் இக்கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள் பெறும்படியாக கூட்டமைப்புடன் சேர்ந்து தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2. இக் கூட்டமைப்பானது இம்முறை பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவினைத் தருகின்றோம். இவற்றின் வெற்றியின் மூலம் பாராளுமன்றம் சென்ற பின் கடந்த காலங்களைப் போன்று அசமந்தப் போக்கோ அல்லது காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டிலோ ஈடுபடாமல் தமிழ் மக்கள் சார்பில் பேரம்பேசும் சக்தியாக இயங்க வேண்டும்.
3. நாம் அரசியற் கட்சியாகச் செயற்படுகின்ற அதேவேளையில், எமது அங்கத்தவர்கள் மற்றும் வாக்களிக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை விருத்தி செய்யும் முகமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுதாயமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தை அரசாங்க சட்டப்படி பதிவு செய்து கடந்த நான்கு வருட காலமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இயங்கி வருகின்றோம். மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில் இவ் ஒன்றியத்திற்கான உதவியினை தங்களின் கட்சி ஊடாகவும், பாதீட்டு நிதி மூலமாகவும் எமக்குச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
4. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடாத்தப்படவுள்ள மாகாணசபைத் தேர்தலுடனும் இதேபோல் ஆதரவினை தங்களுக்கு வழங்கவோம்.
5. எமது கட்சியும் மாகாணசபைத் தேர்தலில் ஈடுபடவுள்ளதனால் தங்களுடன் ஒருமைப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஒன்றாகக் களமிறங்குவதுடன், எமது கட்சிக்கு வடக்கு மாகாணத்தில் 03 ஆசன ஒதுக்கீடும், கிழக்கு மாகாணத்தில் 03 ஆசன ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.
6. எமது கட்சி தங்களுடன் இணைந்து செயற்படுவதால் ஏற்கனவே எங்களிடம் இருந்த போராளிகள் பலதரப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து நின்று செயற்படுவதனைத் தடுப்பதுடன், இனிவரும் காலங்களிலும் போராளிகளும் எம்முடன் இணைந்து கூட்டமைப்பினை வலுப்பெற வைக்கலாம் என்பதே எமது திண்ணம்.
7. தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வேறு தெரிவின்றி தங்களையே நாடியுள்ளனர். தங்கள் கட்சி செய்ய வேண்டிய பணி அளப்பரியது. ஆனால் தங்களை வீழத்துவதற்கான சக்திகளும் இச்சூழலில் கடுமையாகச் செயற்பட்டு வருகின்றன. இந்நிகழ்கால சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு தங்களது கட்சி வீழ்ச்சியடையக் கூடாது என்ற காரணத்தினாலேயே எமது கட்சியும் அதிகபட்ட நிபந்தனைகள் எதுவுமின்றி திறந்த மனதுடன் ஒன்றிணைகின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.