உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, அதே தொற்றால் மரணமடைந்த சீன மருத்துவர் லி வென்லியாங்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகர பிரதான மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.
ஆனால் இந்த விவகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பிய சீன நிர்வாகம், மருத்துவர் லி வென்லியாங்க் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தது.
லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது. இதில் கடந்த பிப்ரவரி 7 ஆம் திகதி லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது.
இதனிடையே கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் மெதுவாக பரவத் தொடங்கியதை அடுத்து அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
கொரோனாவுக்கு தமது மருத்துவ கணவரை பறிகொடுத்த Fu Xuejie தற்போது ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு லி வென்லியாங்கின் கடைசி பரிசு என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் இதனை சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? நீங்கள் எனக்கு அளித்த கடைசி பரிசு இன்று பிறந்துள்ளது. நான் அவனை அன்பாக பார்த்து கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
கணவரின் திடீர் மறைவை தாங்க முடியாமல் கர்ப்பிணியான Fu Xuejie உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர் லி மரணமடைந்த விவகாரம் தனது இன்னொரு குழந்தைக்கு இதுவரை தெரியாது என கூறும் Fu Xuejie, தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருப்பதாகவே நம்ப வைத்துள்ளதாக கூறி கண்கலங்கியுள்ளார்.



















