பிரேசிலில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பால் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பழைய கல்லறைகளைத் தோண்டி புதைக்கும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் 8 லட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்து 901 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதே திடீரென அதிகரிப்புக்குக் காரணமாகும்.
பிரேசிலின் மிகப்பெரிய மெட்ரோ நகரான சா போலாவோவில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகிறார்கள்.
இதனால் உயிரிழந்தவர்களைப் புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் நகர நிர்வாகம் திக்குமுக்காடி வருகிறது.
இதனால் வேறு வழியின்றி சா போலாவில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்துவிட்டு அந்த இடத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இது குறித்து சா போலா மெட்ரோ நகர நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு அந்த இடத்தில் உள்ள எலும்புகள் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு அடையாளமிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்த எலும்புகளை வைப்பதற்காகவே தனியாக 12 கன்டெய்னர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கன்டெய்னர்கள் 15 கல்லறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கல்லறையில் 1,654 உடல்கள் புதைக்கப்பட்டன. மே, ஜூன் மாதத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட எண்ணிக்கை தெரியவில்லை.
சா போலா நகரில் மட்டும் இதுவரை 5,480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.