கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த தென்கொரியாவில் மீண்டும் வைரஸ் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்திருப்பதால், அந்நாட்டு மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.
சீனாவில் டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்கொரியாவையும் பதம் பார்த்தது. அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான டேகுவில் உள்ள தேவாலயத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியது. எனினும் தீவிர சுகாதார நடவடிக்கைகள், கடுமையான ஊரடங்கு உத்தரவு போன்றவற்றால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது தென்கொரியா.
அதை பார்த்து அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளே ஆச்சரியமடைந்தன. இதையடுத்து, ஊரடங்கை தளர்த்திய தென்கொரியா, தனிமனித இடைவெளிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு, பள்ளிகளையும் திறந்தது. இதனாலேயே மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது கொரோனா.
இப்போது தலைநகர் சீயோலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. இந்த முறையும் தேவாலயத்தில் இருந்து 90 பேருக்கு பரவிய கொரோனா தொற்று, சுகாதாரப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் 116 பேருக்கும், கூபாங் என்ற ஒன்லைன் விற்பனை நிறுவனத்தின் சரக்கு கிடங்கில் பணியாற்றும் 146 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.
மே மாத கடைசியில் இருந்து நாள்தோறும் ஏறுமுகத்தில் உள்ள பாதிப்பு, அதிகாரிகளை அச்சமடைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், சீயோல் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள். இங்கு தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றப்படாததால், கொரோனா பரவலின் தடமறிய அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.
இதனால், கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளது தென்கொரிய அரசு. இதனிடையே, சுகாதார வசதிகளுக்கு கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவை ஒழித்துவிட்டோம் என மார்தட்டி, கட்டுப்பாடுகளை தளர்த்தினால், என்ன நடக்கும் என்பதை கண்முன் நிரூபித்துள்ளது தென்கொரியா.