தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதாலேயே இவ்வளவு சிக்கலையும் சந்திக்க வேண்டியுள்ளது.
வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியாக செயற்பட்ட காலத்தில் எந்த பிரச்சனையுமில்லாமல் இருந்தோம் என்ற சாரப்பட, இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களிற்கும், கட்சி பிரமுகர்களிற்கும், வாலிபர் முன்னணிக்குமிடையிலான சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வாலிபர் முன்னணியை பயன்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்ட இந்த கூட்டத்தில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதேவேளை, இந்த கூட்ட செய்திகள் எவையும் தமிழ்பக்கம் இணையத்தில் வெளிவரக்கூடாது, மட்டக்களப்பில் கட்சிக் கூட்டங்களில் நடைபெறும் விடயங்கள் எப்படி தமிழ்பக்கத்தில் வெளியாகிறது என்றும் செயலாளர் கி.துரைராசசிங்கம் சீறி விழுந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய கட்சியின் வேட்பாளர் தெரிவை மட்டக்களப்பில் தீர்மானிக்காமல், கொழும்பிலோ யாழ்ப்பாணத்திலோ தீர்மானிக்கக்கூடாது, அதை மட்டக்களப்பிலேயே தீர்மானிக்க வேண்டும்.
இனியும் வடக்கில் தீர்மானித்து வேட்பாளர்களை களமிறக்கினால் சரியான பாடம் கற்பிப்போம் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நேற்று மாலை நடந்த இந்த சந்திப்பு தொடர்பில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தை தலைமைதாங்கிய செயலாளர் கி.துரைராசசிங்கம், வாலிபர் முன்னணியினர் அனைத்து வேட்பாளர்களிற்கும் தேர்தல் வேலை செய்து தர வேண்டும், அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு மாவட்டத்தில் 4 ஆசனங்களை வெல்ல வேண்டும்.
இளைஞர் அணியினருக்கு ஏதாவது கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள், அதன்பின்னர் வேட்பாளர்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்றார்.
எனினும், பெரும்பாலானவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க சொன்னார்கள்.
இரா.சாணக்கியன் முதலில் கருத்து தெரிவித்தபோது, பட்டிருப்பு தொகுதியில் தனது பாட்டனாரின் தொடர்பில் இருந்தவர்களையும் சந்தித்து வருவதாகவும், பட்டிருப்பு தொகுதியில் ஒரு ஆசனம் பெற வேண்டுமென்றார்.
ஆனால், பட்டிருப்பு தொகுதியில் ரெலோவினர் தனித்து செயற்படுவது தமக்கு பிரச்சனையாக உள்ளதாகவும், ரெலோவினரையும் தமக்கு ஆதரவளிக்கும்படி அறிவுறுத்த வேண்டுமென்றார்.
சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவித்தபோது, இளைஞர் அணியினர் அனைத்து வேட்பாளர்களிற்கும் பொதுவாக செயற்பட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
(மாவட்ட இளைஞர் அணியினர் சாணக்கியன், சிறிநேசன், துரைராசசிங்கம் ஆகிய மூவரிற்குமாகவே திரைமறைவில் அதிகம் செயற்பட்டு வருகிறார்கள்). மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முடிந்து இன்னும் முடிவு வரவில்லை, ஆனால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், நான் இப்பொழுதே எம்.பியாகி விட்டேன்.
எனது வெற்றி உறுதியானது என்றார். இப்பொழுது இளைஞர் அணி பக்கச்சார்பாக செயற்பட்டு, நான் வெற்றிபெற்ற பினனர் ஏதாவது வீதி அபிவிருத்தியென இளைஞரணியினர் வந்தால் அவர்களின் எந்த கோரிக்கையையும் ஏற்க மாட்டேன் என தெரிவித்தார்.
கட்சி பிரமுகர்களும் கருத்து தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வேட்பாளர்கள் தெரிவில் மாவட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை. பெண் பிரதிநிதித்துவம் இல்லை, சில வேட்பாளர்களை அவர்களே பரிந்துரைத்து, அவர்களே நீக்கி, அவர்களே பட்டியலை இறுதி செய்தால் மட்டக்களப்பில் எதற்கு கட்சி? கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்தால் எதற்கு மட்டக்களப்பில் போட்டியிடுகிறீர்கள்? இனினும் யாழிலிருந்தோ, கொழும்பிலிருந்தோ வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம் என பொங்கியெழுந்தார் கட்சியின் மூத்த துணைத்தலைவர் பொன் செல்வராசா.
இளைஞரணி உறுப்பினர்கள் பலரும் அவரது கருத்தை ஆதரித்தனர். வடக்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும் வேட்பாளர்களை தெரிவு செய்யக்கூடாது என்றனர்.
கட்சித்தலைமை சில காரணங்களினால் இந்த வேட்பாளரை தெரிவுசெய்துள்ளது. அதற்கு காரணம் இருக்கும் என செயலாளர் சப்பைக்கட்டு கட்டினார்.
கிழக்கில் அபிப்பிராயம் பெறாமல் வடக்கிலிருப்பவர்கள்தான் முடிவெடுப்பதென்றால், நீங்கள் எல்லோரும் பொம்மைகளா என இன்னொருவர், துரைராசசிங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
“இல்லையில்லை.. நான், செல்வராசா அண்ணன் எல்லோரும் உயர்மட்ட குழுவில் இருக்கிறோம். வேட்பாளர் தெரிவிலன்று செல்வராசா அண்ணன் செல்லவில்லை“ என நிலைமையை சமாளித்தார் செயலாளர்.
முன்னாள் எம்.பி, அரியநேத்திரன் பலநாள் கோபத்தை மனதில் வைத்திருந்திருப்பாரோ என்னவோ, பொங்கியெழுந்துள்ளார். “முதல்முறையாக இப்பொழுதுதான் மொழியறிவு, இராதந்திரம் என்றெல்லாம் அரசியல் தகுதிகள் சொல்லப்படுகிறது.
இதுதான் அரசியலின் தகுதியா? அப்படியென்றால் தலைவர் பிரபாகரன் எந்த பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார். பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் எம்.பி நான். என்னை வேட்பாளராக நியமிக்க கோரவில்லை. ஆனால், புதியவரை நியமிக்கும்போதும் என்னுடன் யாரும் பேசவில்லை.
நெருக்கடியான காலகட்டத்தில் நாம்தான் எம்.பியாக இருந்து இந்த கூட்டமைப்பின் பயணத்தை மேற்கொண்டவர்கள். நாம் போட்ட பாதையில் இன்று புதியவர்கள் வசதியாக பயணம் செய்கிறார்கள்.
ஒரு பாதையை உருவாக்க நாம் தேவை, பின்னர் எல்லாம் சரியான பின்னர் தமக்கு தேவையானவர்களுடன் பயணிக்கும் கட்சியிது. ஒரு நன்றியில்லாத கட்சி என்றார்.
பட்டிருப்பு தொகுதி தலைவர் குறிப்பிடும்போது, மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிற்கு உள்ளூராட்சிசபையை ஒதுக்கியது பிழை என்றார். அனைத்து சபைகளையும் தாமே வைத்திருந்தால் தேர்தலை இலகுவாக வெற்றிகொண்டிருக்கலாம். பட்டிருப்பு தொகுதியை ரெலோவிற்கு ஒதுக்க வேண்டாமென பலமுறை சொன்னோம், கட்சி தலைமை கேட்கவில்லையென்றார்.
இதன்போது, அரியநேத்திரனை பார்த்து- நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதாலேயே இவ்வளவு சர்ச்சை. ரெலோ, புளொட் அனைத்தும் கூட்டமைப்பிற்குள் வந்தன.
பழைய மாதிரியே தமிழர் விடுலைக் கூட்டணியாகவே நாம் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியாக நாம் இருந்தபோது இவ்வளவு பிரச்சனைகள் இருக்கவில்லை என செயலாளர் கி.துரைாாசிங்கம் தெரிவித்தார்.