அண்மை நாட்களாக வடக்கில் படையினரை மிரட்டும் பொம்மை வெடிகுண்டை, இராணுவ முகாமிற்கு முன்பாக வீசிய குற்றச்சாட்டில் நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர் அந்த இளைஞனை கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் இளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி- வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இது தவிர, வன்னிப் பகுதிகளிலும் இரண்டு இடங்களில் பொம்மை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, முகாம்களிற்கு அண்மையிலுள்ள பொம்மை வெடிபொருட்கள் குறித்து, இராணுவத்தினர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சிசிரிவி கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர், நேற்று காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் இளைஞனை கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.